நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் இப்போது அரிசி போதிய கையிருப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விலை அதிகரிக்கும் போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை முன்வைத்த போதும், அது ஐந்தாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் போதுமான அரிசி கையிருப்பை கொண்டிருக்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபைக்கு திருப்தியான கையிருப்பை பேணுவதற்கு 6 பில்லியன் ரூபாய்கள் தேவை. என்றபோது உடனடி நிலைமையை சமாளிக்க 2 பில்லியன்களை அமைச்சு கோரிய போதும், திறைசேரி வெறும் 250 மில்லியன் ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சின் செயலாளரை கோடிட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபை, கையிருப்புக்களை பராமரிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் இருந்து பெற்ற 21 பில்லியன் ரூபாய்களை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கடன்களையும் வட்டியையும் திறைசேரியே தற்போது செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.