அரிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் முழுவதும் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
படையெடுப்பின் ஆரம்ப மாதங்களில் இருந்து ரஷ்யா கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவவில்லை என கூறப்பட்ட போதும், தற்போது நேற்று (வியாழக்கிழமை) முதல்முறையாக உக்ரைன் மீது குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பு உட்பட உயர் துல்லியமான நீண்ட தூர வான், கடல் மற்றும் நில அடிப்படையிலான ஆயுதங்கள் உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பின் முக்கிய தளங்களை தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாத இறுதியில் இருந்து உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களின் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இதனிடையே, 34 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட நான்கு ஷாஹெட் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியது.
ஆனால், ஆறு கின்சல் பாலிஸ்டிக் ஏவுகணைகள், கே.எச்.22 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் எஸ்-300 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இடைமறிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.