தென்னாப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதியை தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சில வாரங்களில் இரண்டாவது முறையாக தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் பலத்த மழைக் காரணமாக, ஒரே இரவில் வீடுகள் மற்றும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள், மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பாதிப்பைச் சந்தித்த மலாவியில் இதன்போது, குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 134 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். மலாவியின் வணிகத் தலைநகரான பிளான்டைரில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
‘எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று பேரிடர் மேலாண்மை விவகாரத் துறையின் ஆணையர் சார்லஸ் கலெம்பா தெரிவித்தார்.
அண்டை நாடான மொசாம்பிக்கில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
புயலின் இரண்டாவது நிலச்சரிவின் பாதிப்பு எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக மொசாம்பிக் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.