சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதற்குத் தேவையான அச்சு இயந்திரங்களின் திறன் போதாமை காரணமாகவே சாரதி அனுமதி அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், தேவையான அட்டைகளை அச்சிடுவதற்கு 5 புதிய அச்சு இயந்திரங்கள் அவசியமெனவும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதற்கு 5 இயந்திரங்கள் உள்ளன.
நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்படுகின்றன.
அவற்றில் சுமார் ஆயிரம் அட்டைகள் ஒரு நாள் சேவையின் கீழ் அச்சிடப்படுகின்றன.
தற்போது சுமார் 8 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள், அட்டைகள் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்து உரிய சாரதி அனுமதி அட்டைகளை சுமார் 6 மாதங்களுக்குள் வழங்க முடியும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.