# இலங்கை
காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாருடன் வசித்து வந்த 22 வயதுடைய ரி.ஜே.மாளவிகா என்ற யுவதி தாயார் வீட்டுக்குள் இருந்த வேளை வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
வீட்டுக்குள் சிக்கிய தாயார் காயங்கள் எதுவுமின்றி வெளியில் தப்பியோடி வந்து அயலவர்களின் உதவியைக் கோரியுள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதிலும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ அணைக்கப்பட்ட பின்னர் அயலவர்களின் உதவியுடன் காணாமல்போன மகளைத் தாயார் தேடியுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மகள்
அவ்வேளை வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாளவிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மனநோயால் குறித்த யுவதி பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
குறித்த யுவது கடந்த நான்கு மாதங்களாக அந்த நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்திருந்தார் என்று அவரின் தாயார் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே யுவதியின் மரணம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால் உயிரை மாய்த்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.