யூடியூப் வீடியோக்களைப் பார்த்து துப்பாக்கி செய்த இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதுரலிய சீலதோல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவுமு் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாமா மருமகன் உறவு முறை என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, 5 அடி நீள துப்பாக்கி, T56 துப்பாக்கி தோட்டா, இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரலிய பிரதேசத்தில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் கடையை எரித்து நாசம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இவர்களில் ஒருவரென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் சுஜித் டி சில்வா தலைமையில் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் குமார தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.