இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாடுகள், அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவீடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த இதுவரை உரிய பொறிமுறையொன்று இல்லையென்றும், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின்
பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே தலைமையில் கூடிய இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ஒன்லைன் தளங்களின் ஊடாக வர்த்தங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வரிகளைச் செலுத்தாது பெருமளவு பணத்தை வெளிநாட்டிலுள்ள தமது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக் கொள்வது இங்கு தெரியவந்தது. இதற்கமைய இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வணிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு சம வர்த்தக சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கிக் பொருளாதாரம் (Gig Economy)வேகமாக வளர்ச்சிகண்டு வருவதால், ஒன்லைன் தளங்களின் ஊடான வர்த்தக செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் அதேநேரம், டிஜிட்டல் சேவை வரியொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், டிஜிட்டல் தளங்களைக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் பலவற்றை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் ஏற்படும் வரி சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான இரண்டாவது தூண் தீர்வுக்கு அமைய (G20 /OECD) 140 உறுப்பினர்களைக் கொண்ட உலக அமைப்பில் இலங்கை, பாகிஸ்தான், கென்யா மற்றும் நைஜீரியா போன்ற நான்கு நாடுகள் மாத்திரமே கைச்சாத்திடவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது.
அதேநேரம், நாணயத் தாள்களுக்குப் பதிலாக டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். நாணயத் தாள்களை அச்சிட்டு அவற்றைப் பயன்பாட்டுக்கு விடுவதற்கு வருடாந்தம் 3.2 பில்லியன் செலவு ஏற்படுவதாகவும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிப்பதன் ஊடாக இந்தச் செலவீனங்களைக் குறைக்க முடியும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்கப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்கி தயாரித்துள்ள திட்டம் குறித்த அறிக்கையொன்றைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.
எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படாத வரையில் நிறுவனங்களைப் பதிவு செய்வதை கட்டாயப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும், நிறுவனப் பதிவுத் துறையானது தகவல்களைத் தாக்கல் செய்யும் முகவராகச் செயல்படும் என்றும் குழுவில் கலந்துகொண்டிருந்த நிறுவனப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டினர்.
இலங்கையில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் வரி
செலுத்துகின்றபோதும் சில சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.