கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் திடீர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது.
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
*• இறக்குமதி தடை*
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி நிலை அடுத்தடுத்து பதிவாகி வரும் அதேநிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகி வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.