இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சிக்கு காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கி (CBSL) நிலைமையை நிர்வகிப்பதற்கு பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து செல்கின்றது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று விபர அறிக்கையின் படி டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 311.60 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 328.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் அது குறித்து ஊடகவியலாளர்களினால் இன்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறிய சில விடயங்கள்:
தேவை மற்றும் விநியோகத்தை பொறுத்தே டொலர் விலை தீர்மானிக்கப்படுகின்றது.
ஒரு வாரத்தில் இறக்குமதி அதிகரிக்கும் போது டொலருக்கான தேவை அதிகரித்து, ரூபாயின் பெறுமதி சரிவடையும்.
ஒரு வாரத்தில் இறக்குமதி குறையும் போது, டொலருக்கான தேவை குறைவதால் டொலரின் பெறுமதி குறையும்.
இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே சந்தையில் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது எனவே இது குறித்து பீதியடையத் தேவையில்லை.