இரு அணு உலைகளுடனான 300 மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி துறையில் பிரபல நிறுவனமான ரொஸெடம் (Rosatom) உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட போதே இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே இதனைத் தெரிவித்தார்.
மேலும்,இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது 300 மெகாவாட் ஆற்றல் கொண்ட பாரிய செயற்திட்டம் எனவும் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருப்பது எரிசக்தி நெருக்கடியில் இருந்து விடுபட பெரும் ஆறுதலாக உள்ளது என தெரிவித்த தூதுவர், அதன் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவு தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகமையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த செயற்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நான்கு பகுதிகளில் ரொஸெடம் (Rosatom) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.