பொசன் போயா தினத்தன்று மதுபான தன்சல் நடாத்தியதை காட்டும் காணொளியை Tik Tok செயலியில் பதிவிட்ட 06 இளைஞர்கள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிலை மற்றும் மதுவை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸ் மா அதிபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளார்.
அதற்கமைய, கட்டுநாயக்கவில் வசிக்கும் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 06 இளைஞர்கள் நேற்று குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு தங்கள் உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேனீரை ஊற்றி Tik Tok செயலிக்கு வீடியோ எடுப்பதற்காக இவ்வாறான செயலை செய்ததாக தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் புகையிலை மற்றும் மதுபான சட்டத்தின் கீழ் மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் 6 பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள் அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.