கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம் முதல் இயங்கி வந்த வாடகை வாகன சேவைக்கு மேலதிகமாக – விமான நிலைய வளாகத்தில் அதிக வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்கி புதிய வாடகை வண்டி சேவையை ஆரம்பிக்க இரண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்.
இதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமான நிலைய ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு நிதி அனுகூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டுள்ளதாகவும்.
இதன் காரணமாக தாம் பெறும் பயண போக்குவரத்து எண்ணிக்கை குறைவதால் பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் (9) விமான நிலைய வாடகை வாகன சேவைகளின் ஒன்றினைந்த சங்கத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துத் தெரிவித்தனர்.
இதனால் பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதகாகவும்,தமக்கு இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லாமல் உயர்தர சேவையை வழங்கியுள்ளதால் இத்தகைய நியாயமற்ற செயல்களால்,தாம் மிகவும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளதாகவும்,இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்வரும் காலங்களில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று நியாயத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது தெரிவித்தார்.