காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட சென்றபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு 11.30 மணியளவில் அக்மிமன பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் தெற்கு அதிவேக வீதிக்கு அருகில் அக்மிமன நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்களை மீறி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்துவிட்டு அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.
அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த தயாரான போது, மோட்டார் சைக்கிளின் சாரதி பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சண்டையிட்டுள்ளார்.
இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மீகொட பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
காயமடைந்தவர் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர்களிடம் இருந்து வெளிநாட்டு கைக்குண்டு , ரி 56 ரக துப்பாக்கி , 105 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.