ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை எரிப்பொருள் சேமிப்பு முனைய அதிகாரிகளுடன் நேற்று(07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்படும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மட்டுமே கடந்த வாரம் அனைத்துப் பொருட்களிலும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரித்தமை தெரியவந்துள்ளதை அடுத்து இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“மொத்தம் 255 வியாபாரிகள் எந்தவொரு தயாரிப்புக்கும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்கத் தவறியுள்ளனர்.
அதே நேரத்தில் 363 விநியோகஸ்தர்கள் ஒரு தயாரிப்புக்கான குறைந்தபட்ச இருப்பை வைத்துள்ளனர்.
அத்தோடு, ஒப்பந்தங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார்.
இதன்போது, அடுத்த 18 மாதங்களுக்கான சரக்கு திட்டம், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் இருப்புநிலை மறுசீரமைப்பு, போக்குவரத்து ஊர்திகளுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் கடவு QR விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம் மற்றும் இலங்கை எரிப்பொருள் சேமிப்பு முனையத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.