இவ்வருட ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 162 இலங்கை ஹஜ் விண்ணப்பதாரிகளில் 35 பேருக்கே சவூதி அரசாங்கம் ஹஜ் கடமைக்கான அனுமதியினை வழங்கியுள்ளதாக அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கைக்கு வழங்கியுள்ள 3500 ஹஜ் கோட்டாவில் இது 1 வீதமாகும்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ள 162 விண்ணப்பதாரிகளில் கணவரோ அல்லது மனைவியோ வெளிநாட்டவராக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழு எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சவூதி அரேவியாவை நோக்கி பயணிக்கவுள்ளது. இக்குழுவில் 62 பேர் அடங்கியுள்ளனர். அத்தோடு ஹஜ் கடமையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை யாத்திரிகர் குழு எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு திரும்பவுள்ளனர்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள், ஹஜ் முகவர்களுடன் உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திட்டு பயணமாவதால் யாத்திரிகர்களுக்கு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள சேவைகள், ஹோட்டல் வசதிகள் என்பன வழங்கப்படவேண்டுமென அரச ஹஜ் குழு முகவர்களைக் கோரியுள்ளது.