இத்தாலி நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுப்படியான சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் வசித்து வரும் மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இலங்கை மக்களுக்கு இதுவரை சிக்கலாக இருந்து வந்த சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்க இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா மனேல்லா இணங்கியதாகவும் நீதியமைச்சு கூறியுள்ளது.
இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் கோரிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இத்தாலி தூதுவருக்கு அனுப்பியிருந்தார். இதன் பிரதிபலனாக இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலி தூதுவருக்கும் நீதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நீதியமைச்சில் நடைபெற்றது.
இதன் போது இலங்கையில் வசிக்கும் இத்தாலிய பிரஜைகளுக்கும் தமது நாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை இங்கு பயன்படுத்த இலங்கை அரசு அனுமதியை வழங்க வேண்டும் என தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலி மற்றும் இலங்கை இடையில் இருந்து வரும் ராஜதந்திர மற்றும் இருத்தரப்பு நட்புறவை கவனத்தில் கொண்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இத்தாலி துதுவரிடம் கூறியுள்ளார்.