இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன துணைஅமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.