இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், சில நிறுவனங்கள் வங்கித் தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் நியதிகளுக்கமைய தடைசெய்யப்பட்ட திட்டங்களைக் நடாத்துகின்றனவா அல்லது நடத்தியுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவிற்கமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய Tiens Lanka Health Care (Pvt) Ltd, Best Life International (Pvt) Ltd, Global Lifestyle Lanka (Pvt) Ltd, Mark-Wo International (Pvt) Ltd, V M L International (Pvt) Ltd, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka, OnmaxDT ஆகிய நிறுவனங்கள் சொல்லப்பட்ட சட்டத்தின் 83(இ) பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாக தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்துகின்றன அல்லது நடத்தியுள்ளன என இலங்கை மத்திய வங்கியானது தீர்மானித்துள்ளது.
சட்டத்தினால் தண்டிக்கப்படக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரமிட் திட்டங்களை நடத்துகின்றதாக / நடத்தியதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள மேலே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய வங்கி சில உடன்பாடுகளை எட்டியுள்ளது என்ற குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் கூற்றை இலங்கை மத்திய வங்கி நிராகரிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.