செல்லுபடியாகும் விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாகமிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கான குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகள் மூலம் வீசாக் காலப் பகுதியை நீடித்துக்கொள்ளாமல், செல்லுபடியாகும் வீசாக் காலம் முடிவடைந்து 07 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலத்தில் வெளியேறும் போது அதற்காக தண்டப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கும், மிகை தங்கியிருப்புக் காலம் 7 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலப் பகுதிக்கு 250 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் மிகை தங்கியிருப்புக் காலம் 14 நாட்களை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் மேம்பாடு, முதலீட்டாளர்களை கவர்வது மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மேற்குறிப்பிட்ட தண்டப்பணத்தை செலுத்தவேண்டும் என்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் தினமொன்றில் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படவுள்ளது.