வவுனியா – கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி பை விகிதம் வழங்குவதற்காக கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு ஓப்பந்தகாரரான வவுனியாவிலுள்ள பிரபல அரிசி ஆலையினால் நேற்று (26.05.2023) காலை 4860 கிலோ அரிசி (10கிலோ பை விகிதம் 486 அரிசி பை) இறக்கப்பட்டது.
குறித்த அரிசி பைகள் மக்களுக்கு நேற்றையதினமே பகிர்ந்தளிப்பட்டப்பட்டதுடன், அவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டத்தினையடுத்து பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சுகாதார பிரிவினர்
கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் குறித்த அரிசியினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன், அவை பாவனைக்கு ஓவ்வாத நிலையில் காணப்படுவதினை உறுதிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் களஞ்சியசாலையினை சீல் வைத்தனர்.