டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் குறித்த Nikkei மன்றத்தில் சற்று முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலக சனத்தொகையில் 60% வீதமானவர்களின் இல்லமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் ஆசியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சீனாவின் மீட்சி, இந்தியாவின் உள்நாட்டு கேள்வி, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களின் பங்களிப்பின் உதவியால் பிராந்தியத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார்.
டோக்கியோவில் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் குறித்த நிக்கேய் மாநாட்டில் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆற்றிய உரையில்,
ஆசியா எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை எடுத்துரைத்தார். ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள், காலநிலை மாற்றம் ,வர்த்தக ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கிய சவால்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆசிய நாடுகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு அரசியல் முறைகள் மற்றும் வரையறைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல்மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ´நிக்கேய்´ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு,கடுமையான வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு, ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.