டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான, ஹூக்கா புகையிலை அடங்கிய கொள்கலன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்துக்கிடமான இந்த கொள்கலன் கைப்பற்றப்பட்டது.
கொள்கலனை ஆய்வு செய்தபோது, அதிலிருந்து நீராவி புகைப்பிடித்தலுக்கு தேவையான ஹூக்கா புகையிலை அடங்கிய பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. அதில் தலா 50 கிராம் கொண்ட 160,200 சிறிய பக்கட்டுக்கள் காணப்பட்டதாகவும் அவற்றின் மொத்த எடை 8010 கிலோகிராம் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதில் 0.05% நிகோடின் உள்ளதுடன், இது இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பொருளாகும். இந்தநிலையில், இவை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. இது சுங்கத்திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.