வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும்.
91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான உண்டியல்களும், 182 நாட்கள் மற்றும் 364 நாட்களில் முதிர்வு செய்யப்படும் தலா ரூ.4,500 கோடிக்கான திறைசேரி உண்டியல்களும் அங்கு ஏலம் விடப்பட உள்ளன.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெறும் போது, அரசாங்கத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக திறைசேரி உண்டியல்களை வெளியிடுவது சவாலான நிலை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடன் மறுசீரமைப்பு அபாயத்தை கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு கடன் வழங்கும் தரப்பினர் அதிக வட்டிக்கு கடன்களை வழங்குவதே இதற்கான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் அதிக வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வது பொருளாதாரத்திற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல எனவும் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் செய்ய வேண்டியது அரசு செலவினங்களை முடிந்தவரை குறைப்பதே என மேலும் தெரிவிக்கப்பட்டது.