(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 2003 ம் ஆண்டை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ” Real Champion 2k03 ” அணியினர் சம்பியனாக முடிசூடிக் கொண்டனர்.
பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 2003ம் வருட கா.பொ.த சாதாரண தர அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ” Real Champion 2k03″ அணியினரும் 2014ம் ஆண்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி “team 98” அணியினரும் பங்கு பற்றியிருந்தனர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற team 98 அணியினர் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்திருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய Real Champion 2k03 அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றனர்.
84 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய team 98 அணியினர் 4.3 பந்து வீச்சு ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்று. 47 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக Real Champion 2k03 அணியின் எச்.எம்.பைஷால் தெரிவு செய்யப்பட்டதோடு, போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக அதே அணியைச் சேர்ந்த றிசாட் கான் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு அதிதிகளினால் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.
24 அணிகள் பங்கு பற்றிய பஹ்ரியன் பிரிமியர் லீக் சீசன் 01 (BPL) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.எச் ஏ ஜெளஸி,
கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட பயிற்சிக்கு பொறுப்பான உதவிமாவட்ட சாரண ஆணையாளரும் இளைஞர் படையணியின் பயிற்றுவிப்பாளருமான மேஜர் கே.எம்.தமிம் ஆசிரியரும், CMT கெம்பஸ் பணிப்பாளர் பி.எம். நளிம் முஹைடீன், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் ஏ.ஏ.றமீஸ், சிரேஷ்ட குவான்டிட்டி சேவையர் எஸ்.எல்.நவாசீர். விஷேட அதிதிகளாக கல்முனை பாத்திமத்துஸ் ஸஹ்றா அரபுக் கல்லூரியின் அதிபரும் தாருஸபா அமைப்பின் தலைவருமான மௌலவி ஏ.ஆர்.சபா முஹம்மட் நஜாஹி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர், எம்.ஏ சலாம், மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேலும் இவ்வருடம் முழுவதுமாக இரத்த தான முகாம்கள், பழைய மாணவர்களின் அணிகள் பங்குகொள்ளும் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கலை, கலாச்சார நிகழ்வுகள், பிரமாண்ட பரிசளிப்பு, மேலங்கி அறிமுகம், சாதனையாளர் கௌரவிப்பு, பெண் பழைய மாணவிகளின் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.