களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டிடமொன்றில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்று (12) களுத்துறை பிரதான நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய மே 26ம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு, இசுரு உயன, இலக்கம் 63 இல் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலக்கம் 402, களுத்துறை, பிரதான வீதி, நாகொடையில் அமைந்துள்ள சிசிலியன் வோக் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள புகையிரதப் பாதையில், இலக்கம் 115, சனசுமவில் வசிக்கும் டிஹாரா நிர்மானி என்ற மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபருக்கு சொந்தமான 94,000 ரூபா பணம், வங்கி அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சந்தேக நபரின் சட்டத்தரணி சரத் கரவிட்ட நீதிமன்றில் தெரிவித்தார்.
இன்று காலை வரை குறித்த பொருட்கள் கையளிக்கப்படாமையால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் உணவின்றி இருப்பதாக தெரிவித்த பிரதிவாதி சட்டத்தரணி, குறித்த பொருட்களை சந்தேகநபரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதற்கு முன்பாக பணம், வங்கி அட்டைகள் மற்றும் வீட்டு சாவியை சந்தேகநபரிடம் அவரது மனைவி முன்னிலையில் ஒப்படைத்ததாக பொலிஸ் பரிசோதகர் தம்மக டி சில்வா அங்கு தெரிவித்தார்.
இந்த மரணம் தற்கொலையா? இல்லை என்றால் கொலையா? அது இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும், உயிரிழந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு விடுத்தவர் யார் என்பதை இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் இதய நோயாள் அவதிப்படுவதால் சிறைச்சாலைக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பிரதிவாதி சட்டத்தரணி கோரியுள்ளார்.
சந்தேக நபரைப் பாதுகாப்பது சிறைச்சாலையின் பொறுப்பு எனவும் அது நீதிமன்றத்தின் பொறுப்பு எனவும் பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் கால் மற்றும் மார்பகத்தில் பற்களின் அடையாளங்கள் காணப்பட்டதாகவும், அது சந்தேக நபரின் பற்கள்தானா என்பதைச் சரிபார்க்க தடயவியல் மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்குமாறும் சப்-இன்ஸ்பெக்டர் கே.என்.ஏ.ஜி.டி. பண்டார நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
சந்தேக நபரை 2023 மே 16 ஆம் திகதி சட்ட வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்ற அறையில் பிரசன்னமாகியிருந்ததுடன், மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மே 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இன்று பலத்த பாதுகாப்புடன் சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
இதேவேளை களுத்துறையில் பயிற்சி வகுப்புகளுக்கு வந்த 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.