உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது, மற்ற பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 10 மையங்களில் இந்நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர்தர மதிப்பீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டின் போது நடைமுறைப் பரீட்சைகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.