ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு புதன்கிழமை (10) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கானது இன்று (12) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு மசோதாவினை TISL நிறுவனம் வரவேற்கும்
அதேவேளை, இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தி இவை
அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளின்
அடிப்படையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அதனூடாக இலங்கை அரசியலமைப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்
இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TISL நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவின் பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட 37
சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது
இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள்/விதிகள் முறைகேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள்
(whistleblowing), தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் பாதகமான
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த
விடயங்களையும் பாதிக்கலாம் என்றும் TISL நிறுவனம் குறித்த மனுவினூடாக குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி நிலுகா
திஸ்ஸாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான
புலஸ்தி ஹேவாமான்ன, கித்மி விஜேநாராயண, பாதிலா பய்ரூஸ், பியூமி மதுஷானி, ஹரினி
ஜயவர்தன, லசந்திக்க ஹெட்டியாராச்சி மற்றும் சங்கிதா குணரத்ன ஆகியோர் ஆஜராகினர்