நாட்டில் நெற்செய்கையை ஊக்குவிப்பதற்காக விரைவில் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்கான கூப்பன் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை உரக்கொள்வனவுக்கான நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலைமையைக் தவிர்ப்பதற்காக நெற் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய 40 000 ரூபாவாகக் காணப்பட்ட யூரியா உரத்தின் விலை 10 000 ரூபாவாகக் குறைத்துள்ளோம்.
எதிர்வரும் தினங்களில் உரக்கப்பல்கள் வருகை தந்ததன் பின்னர் இவ்விலைகள் மேலும் குறைவடையும்.
உர விநியோகத்தில் போட்டித்தன்மை ஏற்பட்டால் அவற்றின் விலைகள் இயல்பாகவே குறைவடையும்.
ஒரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 20,000 ரூபாவும், இரு ஹெக்டயரில் நெற் செய்கையில் ஈடுபடுவோருக்கு 40,000 ரூபாவும் வழங்கப்பட்டவுள்ளது.
உரக்கொள்னவுக்காக கூப்பன் முறைமை ஊடாக இந்த தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூப்பன் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே வெகுவிரைவில் அவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறான நிவாரணங்களை வழங்குவதன் நோக்கம் வெளிநாடுகளிலிருந்து அரசி இறக்குமதி செய்யும் நிலைமையை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாகும்.
உண்மையில் எம்மால் தற்போது அந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பாஸ்மதி தவிர்ந்த வேறு எந்தவொரு அரிசியையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படாது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கினால், அது அவர்களது அரசியல் எதிர்காலத்துக்கு கூட கைகொடுத்திருக்கும்.
எனினும் அவர்கள் வெளியிலிருந்து கொண்டு விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அரிசி மாத்திரமின்றி முட்டையையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
எனவே கோழிப்பண்ணை தொழில் உள்ளிட்டவற்றையும் இவ்வாறான நிவாரணங்கள் ஊடாக ஊக்குவித்தால் முட்டை விலையை 30 ரூபா வரை குறைக்க முடியும்.
விரைவில் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.