பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், 8 நாட்கள் காவலில் விசாரிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்தாண்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.
அதன் பிறகு, பயங்கரவாதம், மத நிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், பொலிஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். இம்ரானை பொலிஸாா் கைது செய்யா விடாமல் அவரது இல்லத்தைச் சுற்றிலும் பிடிஐ கட்சி ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரைக் கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.
அப்போது யாரும் எதிா்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினா் அந்த வளாகத்தில் கைது செய்தனா். அவா்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை ராணுவப் படையான ரேஞ்சா்களும் இம்ரானை சுற்றிவளைத்து கவச வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இம்ரானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.
சாலைகளில் சென்ற காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், ராணுவ தளபதி இல்லத்தை சூறையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், முகநூல், டிவிட்டர், வட்ஸ்எப் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தாதவாறு முடக்கியுள்ளனர்.
மேலும், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.