இலங்கை மின்சார சபை எழுத்துமூலம் கோரியவாறு 30 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 28 மற்றும் 29 ஆகிய கப்பல்களில் நிலக்கரிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிலக்கரி கொண்டுவரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 30 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்களுக்கு மட்டுமே முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 8 கப்பல்கள் கடன் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.