இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கியின் நிதியியல் திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா, கடந்த 11ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.
நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள நிலத்தடியின் மூன்றாவது மாடியில் உள்ள பெட்டகத்தில் இருந்து இந்த பண மூடை காணாமல் போனதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோட்டை பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழுவொன்று உடனடியாக முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெட்டகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள 23 அதிகாரிகளை விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இது தவிர உயர் தொழில்நுட்ப சிசிடிவி கமராக்களும் சோதனை செய்யப்பட்டன.