நாட்டில் கடுமையான வெப்ப வானிலை நிலவுகின்றமையால், வாகனங்களில் உள்ள எரிபொருள் தாங்கிகளில் வெடிப்புகள் ஏற்படுவதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வாகனங்களில் எரிபொருள் தாங்கிகள் முழுமையாக நிரப்பப்படுவதால் இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே பாதி அளவுக்கு மாத்திரமே அதனை நிரப்புமாறும் தெரிவிக்கும் பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.
வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், வாகனங்களது எரிபொருள் தாங்கிகளை பல்வேறு புறச்சூழல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தயாரிப்பதாகத் தெரிவித்த அவர், அதிக வெய்யில் காரணமாக வெடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.