நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெயிலில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
அதிக வெப்பத்தை உள்ளீர்த்தலால் ஏற்படக் கூடிய நீர்சத்து குறைபாடானது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என,
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்தார்.
தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அதிகளவில் வெயிலில் அன்றாட செயற்பாடுகளில், அல்லது தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே இந்தக் குழுவினர் அநாவசியமாக வெயிலில் செல்வதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைவரும் இவ் அதிக வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஆடைகளை அணியும் போதும் இள நிறத்தில் அணிவது பொறுத்தமானதாகும்.
அத்தோடு அதிகளவில் நீர் அருந்துதல் மிக முக்கியத்துவமுடையதாகும்.
எனவே நாளொன்றுக்கு சுமார் இரண்டரை லீற்றர் நீர் அருந்துதல் பொறுத்தமானது.
நீர் ஆகாரங்கள் அல்லது நீர் தன்மையுடைய உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமே தவிர, குளிர் பானங்களை அளவுக்கதிகமாக அருந்துவது பொறுத்தமற்றது.
இதன் காரணமாக ஏனைய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். அதிக வெப்பம் காரணமாக மயக்கம், சோர்வு மற்றும் வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்படக் கூடும்.
திடீரென இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும்.
அதிக வெப்பம் காரணமாக நீர்சத்து குறைபாடு ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.
எனவே குழந்தைகள் , முதியோர் , நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சகலரும் தமது சுகாதார நிலைமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.