ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற மஹிந்தானந்த எம்.பி, மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட கட்டுப்பாட்டாளர் நாயகம், எம்.பியின் கடவுச்சீட்டு தரவில் மற்றொருவரின் தகவலை ஊழியரொருவர் பதிவேற்றியமையே இதற்கு காரணம் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியோர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மத்துகம நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை என்றும் பயணத்தடை விதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளுக்கு அறிவித்த எம்.பி, தனது பயணத்தை இரத்துச் செய்திருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் எம்.பிக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் கோரிக்கைக்கு அமைய தடை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.