பயிர்ச்செய்கைக்காக இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய அரச உரக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (13) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
அதன்போது, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் முன்மொழிவுக்கு அமைய குழுவால் தேசிய கொள்கைக்காக 35 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
நெற்பயிற்செய்கையில் எவ்வளவு இரசாயன மற்றும் சேதன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விவசாய வல்லுநர்கள் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என்றும், அந்த சதவீதத்தின் அடிப்படையில், தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களின் அளவை தீர்மானிக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அரச உரக் கொள்கையொன்றை வகுக்கும் போது விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உர உற்பத்திகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வசதியாக உரம் வழங்கும் செயல்முறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு உணவு பாதுகாப்புக் குழுவிடம் அமைச்சர் கூறினார்.
முன்மொழிவுகளை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளாக அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டது.