அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் என இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்ட எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கைத்திட்டத்தை முன்வைத்து முக்கிய பல விடயங்களை எடுத்துரைத்திருந்தார் குறிப்பாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மலையக எம்.பிக்களுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்
அத்துடன், மலையக மக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்
இதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக சிலர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 13 அநீதியானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்
13 ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரத்தை தரக்கூடிய பொறிமுறையாகும். அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம்
எனவே, 13 குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது” எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.