விலங்குணவு பற்றாக்குறையால் குறைந்துள்ள முட்டை உற்பத்தி மற்றும் 40 ஆயிரமாக குறைந்துள்ள தாய்க் கோழிகளின் இறக்குமதி ஆகியவற்றை நிவர்த்திக்கும் வகையில் 2 இலட்சம் குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது.
முட்டையின் வருடாந்தத் தேவை 2.99 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும், மாதாந்தத் தேவை 249-250 மில்லியனுக்கும் இடைப்பட்ட நிலையில் தற்போது 30 மில்லியனாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முட்டை உற்பத்தி 11 மாதங்கள் தாமதமாகும் என்பதால், 2 இலட்சம் குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதற்கான பூர்வாங்கப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் கீழ் உள்ள மிரிஸ்வத்தை மற்றும் மாரவில பண்ணைகளில் உள்ள இரண்டு குஞ்சு பொரிப்பகங்களில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இறக்குமதியை தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் கால்நடைப் பிரிவு மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தேவையான வசதிகளை வழங்கும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், 2021 ஆம் ஆண்டில் இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக சோள உற்பத்தி 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது தொழில்துறையை எதிர்மறையாக பாதித்தது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.