அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:
ஒரு வார காலத்தில் புதிதாக 35 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பரவல் 12 சதவீதமும், இறப்பு 25 சதவீதமும் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் தொற்று பரவல் 14 வீதமும், ஆபிரிக்காவில் 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேற்கு பசுபிக், பகுதிகளில் நிலையாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியதாவது, நவம்பரில் முதன்முதலாக ஒமைக்ரோனை கண்டறிந்த தென் ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உரு மாறிய கொரோனா மறுபடியும் எழுச்சி பெறுகிறது.
பெரும்பாலான மக்கள் தொகைக்கு நோய் எதிர்ப்புசக்தி கிடைத்துள்ளதால், ஒப்பீட்டளவில் அதிகளவில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் தடுக்கப்படுகின்றன. குறைவான தடுப்பூசி பயன்பாடு உள்ள நாடுகளில் இதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஏழைநாடுகளில் மொத்தமே 16 சதவீதத்தினர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.