மத்திய கிழக்கு நாடான கட்டார் இதுவரையில் எந்தொரு விளையாட்டுப் போட்டிக்கும், நிகழ்ச்சிக்கும் செலவு செய்திடாத வகையில் 2022 FIFA உலகக் கிண்ணத்திற்கு செலவு செய்துள்ளது.
FIFA உலகக் கிண்ணப் போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டொலர்களைச் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
இந்தப் பெறும் திட்டத்தின் கட்டுமானத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும், உதைபந்து இரசிகர்கள் மூலம் உருவாக்கும் வர்த்தகத்திற்காகவும் உலகின் பல நாடுகளில் இருந்து ஊழியர்கள் கட்டாரில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை என்ன..?
நவம்பர் 20 ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் FIFA உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பல நாடுகள் எப்படியாவது வெல்ல வேண்டும் எனக் கனவுடன் வந்தாலும் இறுதிக் கட்டத்திற்கு வந்தது அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகள் தான்.
அர்ஜென்டினா அணி தலைவர் லியோனல் மெஸ்ஸியின் நீண்ட காலக் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகியது. 36 வருடங்களுக்குப் பின் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது. ஆனால் இந்தப் போட்டியை பிரான்ஸ் அணி மிகவும் கடுமையாக்கியதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
90 நிமிடத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட 30 நிமிடத்தின் முடிவில் 3-3 கோல் அடித்தனர். அர்ஜென்டினா சில பதட்டமான தருணங்களில் தப்பிப்பிழைத்து 4-2 பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சம்பியனான பிரான்சுக்கு எதிராகப் போராடி வெற்றியைப் பதிவு செய்தது.
FIFA உலகக் கிண்ணப் போட்டிகளுக்காகக் கட்டார் அரசு சுமார் 8 மைதானங்களைக் கட்டியது. இந்த எட்டு மைதானங்களில் பலவற்றைக் கட்டுவதற்கும் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டார் நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தைக் கட்டிய தொழிலாளர்களின் புகைப்படத்தைப் போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பு அதன் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கட்டார் நாட்டிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு FIFA உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டதில் இருந்தே அந்நாட்டில் தொழிலாளர் உரிமைகள் குறித்து உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கட்டார் நாட்டின் 2.9 மில்லியன் மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு மக்கள் தான். இப்படி வெளிநாட்டில் இருந்து கட்டார் நாட்டிற்குத் தொழிலாளர்களாக செல்வோர் அவர்கள் தங்கும் நிலைமை குறித்துப் பல கண்டிப்புகள் உலகளவில் வெடித்தது.
அத்தோடு கட்டார் நாட்டில் FIFA உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கட்டுமான திட்டங்கள் முதல் பல்வேறு மெகா திட்டங்களில் தொழிலாளர் இறப்பு எண்ணிக்கை உண்மையாகக் காட்டப்படாமல் மிகவும் குறைவாகவே காட்டப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கும் நேரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கட்டார் அரசுடன் அந்நாட்டில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர் நலன் குறித்துப் பேசப்பட்டது. இந்த நிலையில் கட்டார் அரசு விரைவில் இந்த நிலைமாறும் என்றும் அதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பளத்தைத் திருடப்பட்டு மற்றும் குறைக்கப்பட்ட ஊதியத்திற்கான நிதி ஏற்கனவே 350 மில்லியன் டொலர் தொகையைக் கட்டார் அரது கொடுத்துள்ளது. மேலும் காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு ஈடுசெய்யவும் கட்டார் அரசு முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளிநாட்டு ஊழியர்கள் இந்தக் கட்டார் FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்பு பணியை இழக்கும் அபாயமும் உள்ளது. இதேவேளையில் உலக நாடுகளில் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.