இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.
பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார். இளைஞர்களின் ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் ஜனாதிபதியின் தொலை நோக்கை நனவாக்குவதற்கு இத்தொழிற்பயிற்சி நிலையம் வழிவகுக்கும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹானுக்கும் இடையில் நேற்று (09) கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.