பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக பகிரங்கமாக தனது பதிலைத் தெரிவித்ததாகவும், இது கட்சியின் பாராளுமன்ற குழு,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் உடன்பாடு மற்றும் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தாம் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் முன்வைத்த வன்னம் ஜனாதிபதி உண்மையான நிலைப்பாடுகளை திரிபுபடுத்தியுள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிபந்தனைகளுடனையே உரிய கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நிபந்தனையின்றி பட்டம் பதவி சலுகைகளை ஏற்றுக் கொள்வதற்காக தான் ஒருபோதும் செயற்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவ்வாறான பதவி வெறி தனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமும், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குத் தீவைத்த கீழ் தர நடவடிக்கையும் ஒன்றல்ல வேறுபட்டவை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு தான் முற்றிலும் எதிரானவன் எனவும்,ஜனநாயகப் போராட்டங்களுக்கு
நிபந்தனையின்றி சார்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
*கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள்;
1- குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்தல்.
2- இரண்டு வார காலத்திற்குள் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வருதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
3 -எம்மால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கச் செய்யும் வகையில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய மிகக்குறுகிய காலத்திற்குள் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தல்.
4 -மக்களுடைய வாழ்க்கை முறையை வழமை நிலைக்கு கொண்டு வருவதுடன்,சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்திய பின்னர் ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற தேர்தலை நடாத்துதல்.