ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்