மலேஷிய அரசாங்கம் இலங்கைக்கு 22,350,000 ரூபா மதிப்புள்ள (2,88,610 மலேஷிய ரிங்கிட்) மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸிடம், புத்ரா ஜெயாவிலுள்ள சுகாதார அமைச்சில்,
மலேஷிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனினால் இந்த மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. மலேஷிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நன்கொடை மலேஷியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருங்கிய உறவு, நட்பு என்பன, இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்புக் காலத்தில் மலேஷிய மக்கள் இலங்கை மக்களுடன் இருப்பதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிராபத்தை விளைவிக்கும் பூஞ்சை தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,000 ஆம்போடெரிசின் பி இன்ஜெக்ஷன் 50 மி.கி குப்பிகளை உள்ளடக்கிய மருந்துகள், ஹெபரின் இன்ஜெக்ஷன் 25,000 I.U/5 ml இன் 20,000 குப்பிகளும் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.இவை, இரத்தத்தின் உறைதல் திறனைக் குறைக்கவும் மற்றும் இரத்த நாளங்களில் தீங்கு விளைவிக்கும் உறைவுகளை உருவாக்குவதைத் தடுக்கவும் உதவுகிறது. 10 மில்லி ஊசியில் அமினோபிலின் 25 மி.கி/மிலியின் 10,000 ஆம்பூல்கள் மேலும் மூச்சுக்குழாய் அடைப்பு நோய்களுக்கான சிகிச்சை மருந்துகளும் இதில் அடங்குகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக இவை,நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது .