அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, பொது மக்களும் பெருமளவிலானோர் தற்போது அங்கு விரைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவு இரண்டிற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே..என்.தில்ருக்கின் கையொப்பத்துடன் இது தொடர்பான கடிதம் போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.