தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஹெலோவீன் கொண்டாட்டம் இடம்பெற்ற போது அவ்வழியாக வேலைக்கு சென்ற நிலையில் வீதியில் இருந்த வடிகானொன்றில் சிக்கி பின்னர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலுமொரு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து பணிக்காக வெளியேறிய சுமார் 23,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் தங்கியுள்ளனர்.
இந்த விபத்தினால் அவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தாம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உயிரிழந்த இளைஞனின் உறவினர்களை வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து தேவையான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.