பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு முதல்முறையாக உரையாற்றினார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3ஆம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற ரிஷி சுனக், நாட்டு மக்களுக்கு முதல்முறையாக உரையாற்றினார்.
“நாட்டின் வளர்ச்சியை முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் விரும்பியதில் தவறில்லை. மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது அமைதியின்மையை நான் பாராட்டுகிறேன். ஆனால், பொருளாதாரத்தை கையாள்வதில் சில தவறுகள் செய்யப்பட்டன. தவறான எண்ணம் இல்லையெனினும், தவறுகள் நடந்துவிட்டன.
இந்த அரசு அனைத்து நிலைகளிலும் நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல்படும். பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உறுதியை ஏற்படுத்துவதே இந்த அரசின் முதல் திட்டமாகும். சில கடினமான முடிவுகள் வரப்போகிறது என்பது இதன் அர்த்தம்.
நான் வழிநடத்தும் இந்த அரசு, அடுத்த தலைமுறையினருக்கு கடனை விட்டுச் செல்லாது.” எனத் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.