இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட, பாடசாலை இஸ்லாம் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு 2021 மற்றும் 2022 இல் விநியோகிக்கப்பட்டன.
ஆனால் இன, மத, குல வாதம் காரணமாக தன்னுடைய மார்க்கத்தைக் கற்பதற்குக் கூட தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு இஸ்லாம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு மீள பெறப்பட்டுள்ள இப்படி மோசமான நிலை இந்நாட்டில் காணப்பட்டது. நீங்கள் அப்படியான அமைச்சர் அல்ல. இன, மத, குல வாதம் அல்லாத நேர்மையான கல்வி அமைச்சர் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, ´தன்னிடமும் இது தொடர்பாக சமூக அமைப்பொன்று தபாலில் வினவியுள்ளது. தரம் 6, 10, 11 ஆகியவற்றின் இஸ்லாம் பாடநூல் வழங்கப்பட்டு மீள்பரிசீலனைக்காக மீளப்பெறப்பட்டுள்ளது. அதனால் அம்மாணவர்களுக்கு இன்னும் புத்தகம் கிடைக்கப்பெறவில்லை. கடந்த வாரம் தான் எனது அவதானத்திற்கு இத்தகவல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தின் அவதானத்திற்குக் கொண்டுவந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்றார்.