நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்பகட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (16) காலை சியம்பலாண்டுவ பிரதேச செயலக பிரிவில் ரத்துமட, வீரகந்தவல ஆகிய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கைகளை நேரில் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மொனராகலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
விவாதம் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வீதிக்கு வந்து இரத்தம் சிந்தப் போவதாக சிலர் கூறியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்த அவர், இரத்தம் சிந்துவதற்கு முன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
சியம்பலாண்டுவ, ரத்துமட மற்றும் வீரகந்தவல ஆகிய பிரதேசங்களைச் சூழவுள்ள பகுதிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் வயல்நிலங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விவசாயிகளுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.இதன்போது தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கும் சந்தர்ப்பம் விவசாயிகளுக்கு கிடைத்தது. உரம், கிருமிநாசினி, களைக்கொல்லிகளின் பற்றாக்குறை, காணிப்பிரச்சினை, நீர்ப்பிரச்சினை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் போன்றவை தொடர்பிலும் விவசாயிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை விவசாய நிலத்திற்கு அழைத்த ஜனாதிபதி, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை இங்கு விசேட அம்சமாகும். தமது பிரதேசத்திற்கு ஜனாதிபதி ஒருவர் வருகை தந்தது இதுவே முதற்தடவை என்று குறிப்பிட்ட விவசாயிகள், தங்களுக்கு அருகில் வந்து பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் ஜனாதிபதி செயலக அதிகாரி ஊடாக பதிவு செய்து கொண்ட ஜனாதிபதி, இதற்கென தனியான மேலதிகச் செயலாளர் ஒருவரை ஜனாதிபதி அலுவலகத்தில் நியமித்து, முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதுதவிர, பிரதேச மக்கள் எதிர்நோக்கும் கல்வி, வீதி , வீடமைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. அந்த அனைத்துப் பிரச்சினைகளையும் செவிமடுத்த ஜனாதிபதி, பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதேச மாணவர்களை பல்கலைக்கழகக் கல்வி வரை அழைத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், திரும்பி வரும் வழியில் ஜனாதிபதி, சியம்பலாண்டுவ களுஓப்பா தர்மசோக்க ஆரம்பப்பாடசாலையில் நடைபெற்ற அரநெறிப் பாடசாலைக்கும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றிச் சென்று அங்கிருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.முன்னறிவிப்பின்றி அவர் அந்த இடத்திற்கு வந்தாலும், மாணவர்கள் ‘ஜெயமங்கல’ கீதம் பாடி ஜனாதிபதியை வரவேற்றனர்.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசேந்திர ராஜபக்ஷ, ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கயாஷான் நவநந்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன, முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்து குமாரசிறி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் பிரதேச அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.