கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மேல் பார ஊர்தி வெடிகுண்டு வெடித்ததால் அதனொரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனின் கார்கிவ் மீது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த முக்கிய பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதனை யாரும் உரிமை கோராவிடினும், தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய எதிர்ப்பு சக்திகளின் கை மேலோங்கியிருப்பது புலனாகிறது.
ரஷ்யாவில் இருந்து கிரிமியாவுக்கான ஒரேநில இணைப்பாக இந்த பாலம் 2018இல் ஜனாதிபதி புட்டினால் திறக்கப்பட்டது. உக்ரேனில், குறிப்பாக தெற்கில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு இராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கும், அங்கு துருப்புக்களையும் கொண்டு செல்வதற்கும் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்தது.
கிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அவ்வப்போது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆரம்பக்காலத்தில் கிரேக்கர்கள், பல்காரிகள், கிரேக்கர்கள், துருக்கியர், மங்கோலியர் ஆகியோர் கிரிமியாவை ஆரம்பக் காலத்தில் ஆண்டார்கள்.
பின்னர் 15முதல் 18ஆம் நூற்றான்டு வரை ஒஸ்மேனிய பேரரசும், பின்னர் 18 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை ரஷ்சியப் பேரரசாலும், இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியாலும், 20ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தினுள் ரஷ்சியாவாலும், பின்னர் உக்ரேனாலும் ஆளப்பட்டது.
1954 பெப்ரவரி 19ஆம் நாள் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் இப்பகுதியை உக்ரேனுக்குப் பரிசாக கொடுத்தார். உக்ரேன் ரஷ்சியப் பேரரசில் இணைந்து 300ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக கிரிமியா வழங்கப்பட்டது.
ரஷ்சியாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 2011குடிசன மதிப்பீட்டின் படி 58.32சதவீதம் ரஷ்சிய மக்களும், 24.32சதவீதம் உக்ரேனியர்கள் மிகுதி 12.10சதவீதம் கிரிமிய தத்தார்களும் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடியில், ரஷ்சியாவின் இராணுவ தலையீட்டாலும், பின்னர் நடந்த கிரிமியன் பொது வாக்கெடுப்பின் படியும் கிரிமியா, உக்ரேன் நாட்டிலிருந்து விலகி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அப்போது தீவிரமாக எழுந்தது.
உக்ரேனின் நான்கு பிராந்தியங்களை இணைத்து உள்ளதாக ரஷ்யா கடந்த வாரம் அறிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24இல் போர் தொடுத்து, ஏழு மாதங்களை கடந்து போர் இன்னமும் நீடித்து வருகிறது.
உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டனியன்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சான், மற்றும் ஜபோரிஸ்சியாவை தற்போது ரஷ்யா இணைத்துள்ளது. இந்த நான்கு பிராந்தியங்கள் முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மொஸ்கோவில் பிரகடனப்படுத்தி உள்ளார்.
இதற்காக இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துக்களை கேட்கும் வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது.
பொதுசன வாக்களிப்பில் இந்தப் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்க மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். ஜபோரிஸ்சியாவில் 93சதவீதம் பேரும் கெர்சானில் 87சதவீதம் பேரும் லுஹான்க்சில் 98சதவீதம் பேரும் டனியன்ஸ்க்கில் 99சதவீதம் பேரும் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரிமிய நிலத்தை பெற்றுகொள்ள பல தலைமுறைகளாக ரஷ்யர்கள் போராடியிருப்பதாக புட்டின் குறிப்பிட்டார். டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ளவர்கள் ரஷ்யாவின் குடிமக்களாக என்றென்றும் இருப்பர் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளர்.
தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கும் வகையில் இயன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி இந்த நிலத்தை ரஷ்யா பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டையும் ரஷ்யா மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரேனின் இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவோடு இப்போது இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளை மீட்க மேற்கொள்ளும் முயற்சிகள், ரஷ்ய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி தாக்குதலாக கருதப்படும். இதனால், உக்ரேன் மீதான போர் மேலும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா, மற்றய நான்கு உக்ரேனிய பிரதேசத்தின் சுமார் 109,000 சதுர கிலோமீற்றர்கள் (42,000 சதுர மைல்கள்) ரஷ்யா தற்போது உரிமை கோருவதாகத் தெரிகிறது. அது உக்ரேனின் நிலப்பரப்பில் 18 சதவீதமாகும்.
இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவும் மேற்குலகும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. இந்த நகர்வுகளை கண்டிப்பதற்கும் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைப்பதற்கும் நாங்கள் சர்வதேச சமூகத்தை ஒன்றுதிரட்டுவோம்.
உக்ரேனுக்குத் தேவையான உபகரணங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான உபகரணங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம், என்று அமெரிக்க ஜனாதாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போரின் ‘மிக தீவிரமான தீவிரத்தை’ புட்டின் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
உக்ரேனிய ஜனாதிபதி; ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைத்தால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியுள்ளார்.
உக்ரேன் நேட்டோவின் விரைவான உறுப்பினர் பதவிக்கு முறையாக விண்ணப்பித்து வருவதாகவும் அவர் அறிவித்தார், மாஸ்கோ இதனை கடுமையாக எதிர்க்கிறது, மேலும் ரஷ்யா எல்லைகளை மறுவடிவமைப்பதாக குற்றம் சாட்டினார்.
உக்ரேனின் கெர்சான் பகுதியில் ரஷ்ய இராணுவம் பின்வாங்கல்களை அடைந்ததாக மேற்குலக ஊடகங்கள் வரைபடங்களை காட்டுகின்றன. உக்ரேனின் தெற்கு கருங்கடல் பகுதி கெர்சனில் ரஷ்யப்படைகள், அண்மைய நாட்களில் பின்வாங்கி இழப்புகளை சந்தித்துள்ளன என்று மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் கூட செய்திகளை வெளியிட்டுள்ளது.
அதேவேளை இந்த மாதம் ஆரம்பத்தில் உக்ரேனின் எதிர் தாக்குதலின் விளைவாக, லுஹான்ஸ்க் மாகாணத்தின் எல்லை வரை, அவர்கள் கிழக்கு நோக்கி 20கிலோமீற்றர் பின்வாங்கியதாகத் தெரிகிறது.
கிழக்கு உக்ரேனின் முக்கியப் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருந்தாலும், கட்டம் கட்டமாக உக்ரேன் அவற்றை மீட்க முனைந்து வருகின்றது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் இராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகிவற்றின் காரணமாக உக்ரேன் தொடர்ந்து ரஷியாவுடனான போரிட்டு வருகிறது.
முக்கிய நகரமான லைமன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கிழக்கு டனியன்ஸ்க் பிரதேசத்தில் உக்ரேனியப் படைகள் கூடுதல் பகுதிகளை மீட்டெடுத்ததாக உக்ரேனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உக்ரேனின் கிழக்குப் பிரதேசமான லுஹான்ஸ்கை மீண்டும் வெல்வதற்கான முயற்சிகளின் போது ரஷ்ய இலக்குகளையும் உக்ரேன் தாக்கியது எனவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
உக்ரேனின் இராணுவம் ரஷ்யப் படைகளுக்கு எதிராக பெரிய, விரைவான முன்னேற்றங்களைச் செய்து, நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் பல நகரங்களை விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்கிரமடையும் உக்ரேனிய போர்க்களத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாம் என ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.