மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி, ஏழாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அதேவேளை ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை அணி, தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரனவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களையும் ரனசிங்ஹ 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சில், ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளையும் கயக்வாட் மற்றும் ரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 66 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால், அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்மிரிதி மந்தனா 51 ஆட்டமிழக்காது ஓட்டங்களையும் ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில், ரனவீர மற்றும் தில்ஹாரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகியாக ரோனுகா சிங்கும் தொடரின் நாயகியாக தீப்தி சர்மா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.